வேப்ப மரம் ஒன்றின் கிளை பச்சைப் பாம்பு உருவத்தினை போன்று உள்ளதால் பொதுமக்கள் அதனை வழிபாடு செய்து வணங்கி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சி பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெரியாண்டவர் கோவில் கட்டுவதற்கு, பெரியாண்டவர் சிலை ஒன்றினை வாங்கிவந்து அதனை ஒவ்வொரு வீட்டின் அருகே பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
அப்பொழுது பூசாரி ஒருவர் பூஜை செய்வதற்கு அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே இருந்த வேப்பமரத்தில் வேப்பிலை பறித்து வர சொன்ற போது, அம்மரத்தின் கிளை ஒன்று பச்சை நிறத்தில், பாம்பு உருவம் பதித்தது போன்று வளர்ந்திருப்பதை அவதானித்து அனைவருக்கும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, பச்சை நிறத்தில் பாம்பு படம் எடுப்பது போன்று நீளமாக மரக்கிளையில் தொங்கி இருப்பது கண்டு ஆச்சரியமடைந்ததோடு, அதற்கு பூஜை செய்து வழிபட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ‘கடந்த 10 தினங்களுக்கு முன்பு வேப்ப மரத்தின் அருகில் உள்ள வீடு ஒன்றில் பாம்பு நுழைந்ததை கண்டு பயந்து போய் அந்த பாம்பை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
மேலும், அதற்கு ஜோடியான பாம்பு ஒன்று அதே பகுதியில் சுற்றித்திரிந்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் வீட்டின் அருகாமையில் இருந்த வேப்ப மரத்தில் பச்சை நிறத்தில் பாம்பு உருவம் தொங்கிய நிலையில் இருப்பதால் அந்த பாம்பு ஆத்மா தான் இது போன்று காட்சி அளிக்கிறதா? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
மேலும் அங்குள்ளவர்கள் தவறை உணர்ந்து தற்போது நாள்தோறும் வேப்ப மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வருவதோடு, அப்பகுதி மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு செல்கின்றனர்.