என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் சிலர் தமது அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி அதிகாரத்துக்கு வர முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்று யாழ் .மாவட்ட செயலகத்தில் உள்ள இணைத் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தலின் போது திட்டமிட்ட வகையில் என் மீது சேறு பூசும் பல நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதை எல்லாவற்றையும் தாண்டி மக்கள் பேராதரவுடன் யாழ். தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவனாக என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்கள்.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தேன். அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் அதனை விரும்பாத அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும் என நினைப்பவர்கள் என்னை தொடர்ச்சியாக சீண்டி வருகின்றார்கள்.
நான் எனது தேர்தல் வாக்குறுதியில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்தி இருந்தேன். தற்போது அதற்கான ஆரம்பம் இடம்பெற்றுள்ளது. சரிகம திட்டத்தை ஆரம்பித்து அடிக்கல் நாட்டும் போது நிதி ஒதுக்காமல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக என்மீது சேறு பூசல்கள் இடம்பெற்றது .
தற்போது அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ் .மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் என்மீது முன்வைக்கப்பட்டது.
இறுதிப் பட்டியல் வெளியிடாமல் அடிக்கல் நாட்டுகிறார் , தனக்குரிய அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்றும் வீட்டுத்திட்ட முறைப்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக பிரதமர் செயலகத்திலிருந்து ஒருவர் அனுப்பப்பட்டுள்ளர் என பல்வேறு செய்திகள் வெளிவந்தன.
நான் அடிக்கல் நாட்டிய வீட்டுத் திட்டங்கள் எவ்வித முறைப்பாடுகளும் என்று முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கே அடிக்கல் நாட்டினேன். வீட்டுத்திட்டம் தொடர்பில் எனது சார்பிலும் பெயர் பட்டியலை வழங்கி இருந்தேன் .
அதேபோல் ஏனைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பட்டியலை அனுப்பி இருந்தார்கள். பட்டியல்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுற்று நிருபங்களுக்கு அமைய புள்ளியிடப்பட்டு தேர்வு செய்யும் நடவடிக்கைகள் சுயாதீனமாக இடம்பெற்றது.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு பட்டியல் இடம்பெற்றுவரும் நிலையில் மக்களை குழப்பும் வகையில் சிலரது செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைக்கப்பெற்ற பலநூறு வீட்டுத் திட்டங்களில் இன்று வரை மக்கள் குடியேறாத நிலையில் கடந்தகால ஆட்சியாளர்களின் முறையற்ற செயற்பாடுகளும் அவர்களுக்கு ஊதுகுழலாக இருந்தவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கிறது.
என்னை எதிர்ப்பவர்களிடம் நான் ஒன்றைக் கேட்க ஆசைப்படுகிறேன். நாங்கள் எல்லோரும் அரசியல்வாதிகள் மக்களுக்காக சேவையாற்றுகிறோம் என்றால் ஏன்? எமது மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்தியை அரசியல் நோக்கத்திற்காக விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி? எனக்கு எழுகிறது.
விமர்சனங்களை கண்டு நான் அஞ்சுபவன் அல்ல என் மீது விமர்சனங்கள் எழும்போது தான் மக்கள் என்னை ஆதரித்தார்கள். ஆகவே இவ்வாறு தொடர்ந்து விமர்சனங்களை மீது வைக்கப்படும் போது எனது நிலை மேலும் உயர்வடையும் என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















