நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததால் பெருத்த நஸ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மீன் பிடி விசைப்படகுகள் உள்ளன. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வு, இலங்கை கடற்படையினர் தாக்குதல்,அச்சுறுத்தல் சம்பவங்கள் மற்றும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை இல்லாததால் நேற்று சனிக்கிழமை சுமார் 300 க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் தனுஸ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது சுமார் 8ற்கும் மேற்பட்ட அதி நவீன ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அப்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்களில் பெருத்தபட்ட ராட்சத மின் விளக்குகளை ஒளிர விட்டு மீனவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்ததுடன் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு மீனவர்களின் படகுகள் மீது வீசியுள்ளனர்.
இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் சுமார் 50க்கும் அதிகமான மீன் பிடி விசைப்படகுகள் இரவே நஸ்டத்துடன் கரை திரும்பினர். எஞ்சிய விசைப்படகுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் தனுஸ்கோடி அருகே பாரம்பரிய இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படை மீனவர்கள் வலைகளை அறுத்து கடலில் வீசியதுடன் கைது செய்வோம் என ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.
இதனால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை நஸ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் மற்றும் விரட்டியடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடி தொழிலை விட்டு மாற்று தொழில் தேடி செல்ல வேண்டிய அவலம் ஏற்படும் எனவும், இது இதே நிலை நீடித்தால் மீன்பிடித் தொழில் அழியும் அபாயம் ஏற்படும் என பாதிக்கபட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.