அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமல், இலங்கை மின்சார சபை, சீன நிறுவனம் ஒன்றுடன் 67 மில்லியன் அமெரிக்க டொலருக்கான “செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு ஆலோசனை சேவைகள்” (O & M) ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது நடைமுறையில் உள்ள ரூபா பெறுமதியில் 13.3 பில்லியன் ஆகும். நுரைச்சோலை “லக்விஜய” ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 10ஆண்டுகளில் இந்த ஒப்பந்தங்கள் சீனாவின் இயந்திர பொறியியல் கழகத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அமைச்சரவை ஒப்புதல் இல்லாத காரணத்தினால் இந்த ஒப்பந்தத் தொகைகளில் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது இலங்கை ரூபாயில் 4 பில்லியன் தொகையை, இலங்கை மின்சார சபையினால் தீர்க்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்விஜய, மின்சார சபையினால் முழுமையாகச் சொந்தமாக இயக்கப்படும் ஒரு ஆலையாக உருவாக்கம் பெற்று ஒரு தசாப்தத்திற்குப் பிறகும், அத்துடன் இலங்கையின் பொறியியலாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள போதும், சீனத் தொழிலாளர்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கு உதவி வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் ஒப்பந்தத்தில், சீன ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம், அதிகமானதாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூத்த முகாமையாளர்களுக்கு 16,000 அமெரிக்க டொலர் (ரூ .3 மில்லியன்) முதல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 6,500 அமெரிக்க டொலர் (ரூ. 1.2 மில்லியன்) வரை செலுத்த மின்சார சபை உடன்பட்டிருந்தது.
குறித்த சீன நிறுவனத்துடன், 4.6 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 915 மில்லியன்) மற்றும் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 1.6 பில்லியன்) மதிப்புள்ள இரண்டு ஒப்பந்தங்களிலும், 2019 ஆம் ஆண்டில் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 1.3 பில்லியன்) மதிப்புள்ள மற்றொரு ஒப்பந்தத்திலும், இலங்கை மின்சார சபை கையெழுத்திட்டுள்ளது.
இப்போது அக்டோபர் 2021க்கு பின்னர் அடுத்த இரண்டு ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதற்காகச் சீன நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கொழும்பின் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.