மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்பார்கள். பழமொழியாக இருந்தாலும் இக்காலத்திற்கு அது மிகவும் பொறுத்தமானதாக உள்ளது. துவக்கத்தில் துள்ளலாக இருக்கும் காதல், காலப்போக்கில் காற்று இறங்கிய பலூன் போல தளர்ந்து விடுகிறது.
வாழ்க்கை துணை என்ற ஸ்தானத்தில் இருப்பவரால் வாழ்வின் மிகப்பெரும் பாரம் ஆகவும் முடியும். காதல் வாழ்க்கை கசந்து போகும் வேளையில் அதனை சீர்செய்வது அவசியமாகிறது. அதற்கு, முதலில் உங்கள் காதல் எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
காதலில் சிறிய பிரச்சனைகள் வருவது சகஜம் தான். மோதல் கூட பல நேரங்களில் காதலில் முடிவதுண்டு. அதே சமயம், சிறிய பிரச்சனைகள் கூட கண் இமைக்கும் நேரத்தில் பெரிதாக வளர்ந்து உங்கள் அன்பை மறக்கடிக்கும் அளவிற்கு அபாய கட்டத்தை தாண்டிவிடும். இனி இவருடன் வாழவே முடியாது என்ற நிலை வந்துவிடும்.
எனவே, முன்னெச்சரிக்கையாக உங்கள் காதல் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு அதனை சீர் செய்தால் மட்டுமே உங்கள் உறவு பிழைக்கும். மேற்கண்டது போல உங்கள் வாழ்க்கை துணை, வாழ்க்கை பாரமாக மாறிவருகிறாரா என்பதை தெரிந்துகொள்ள சில அறிகுறிகள் இருக்கின்றன. அவை கீழ்வருமாறு:
பதட்டம், சோர்வு அல்லது மன உளைச்சல்
காதலில் வென்றவர்கள் மேற்கண்டதற்கு முரணான உணர்வுகளை அனுபவிப்பர். ஆனால், காதலில் சொதப்பியவர்கள் எந்நேரமும் பதட்டமாக சுற்றித் திரிவர். காதலருடன் இருப்பதை இனிமையாக உணராமல் அதை ஒரு சுமையாகக் கருதுவர்.
காதலரிடம் உள்ள பிரச்சனைகளில் அதிக கவனம்
காதலரின் நலனில் அக்கறை கொள்வதை மறந்து காதலரிடம் உள்ள பிரச்சனைகளை பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பர். பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று உங்கள் காதலர் விரும்பினாலும் நீங்கள் அவரை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பீர்கள். அவருக்கு எல்லாமுமாய் நீங்கள் இருப்பதாகவும், அவர் உங்களை ஆதரிக்காதது போலவும் உணர்வீர்கள்.
காதலரிடம் அன்பு செலுத்த இயலாது
காதலர் உங்களை மதிக்காதது போலவும், உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது போலவும் உணர்வீர்கள். மேலும், உங்கள் உணர்வுகளை மதிக்காது அவர்கள் விருப்பத்தின் படியே செயல்படுவது போல தோன்றும்.
நீங்கள் நீங்களாக அவருடன் இருக்க இயலாது
உங்கள் உணர்வுகளை அவர்களிடம் உள்ளபடியே வெளிப்படுத்த தயங்குவீர்கள். சண்டை, சச்சரவை தவிர்க்க அவருடன் அதிகம் பேச்சு கொடுக்காமல் இருப்பீர்கள். நீங்கள் நினைப்பது எதையும் உங்கள் காதலர் ஏற்கமாட்டார் என்றே தோன்றும்.
தனிமைக்காக ஏங்குவீர்கள்
காதலருடன் இல்லாத நேரமே அமைதியை உணர்வீர்கள். இதனால் தனிமையை அதிகம் நாடுவீர்கள். காதலருடன் இருக்கும் நேரம் கடும் மன உளைச்சல் கொடுப்பதாகத் தோன்றும்.