முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, தீக்காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.
இதனை தெரிந்துகொண்ட ரிஷாட், அச்சம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்றுவிட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார், தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் வீட்டில் வைத்து மரணமடைந்த சிறுமி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏன் வாய்திறக்கவில்லை.
ரிஷாட்டுக்கு எதிராக சதொசவில் கோடிக்கணக்கான பண ஊழல் தொடர்பிலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ரிஷாட்டை ஏன் தண்டிக்கவில்லை எனக் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறே அமைதியாக இருங்கள். நாங்கள் சரியான நேரத்தில், உரிய வகையில் ஆதாரங்களை திரட்டி, வழக்குத் தொடர்வோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 அகவை சிறுமி மரணமானமை தொடர்பாக ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மூன்று பேரின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை வழங்குமாறு சேவை வழங்குநர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், தொலைபேசி பதிவுகளுக்கு மேலதிகமாக, சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்த இடைத்தரகரின் வங்கி கணக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிட்டது.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 அகவை சிறுமி, தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஜூலை 03ம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 12 நாட்களின் பின்னர் குறித்த சிறுமி உயிரிழ்தார் என்பது குறிப்பிடத்தக்கது.