“வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உருவாகியுள்ள கொரோனா கொத்தணிகளுக்கு மக்களின் பொறுப்பற்ற செயல்களே காரணம்.”
– இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா.
பருத்தித்துறை கொத்தணி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கொரோனாத் தொற்றுப் பரவலால் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது முகக்கவசங்களைக் கட்டாயம் அணிய வேண்டும். ஆனால், பல இடங்களில் முகக்கவசங்களை நாடிகளுக்குக் கீழே விட்டுக்கொண்டு மக்கள் வெளியில் பயணிக்கின்றனர்.
இதில் யாழ். மாவட்ட மக்களும் விதிவிலக்கல்லர். கொரோனாவின் முதலாம், இரண்டாம் அலைகளைக் கட்டுப்படுத்த வடக்கு மக்கள் குறிப்பாக யாழ். மக்கள் முழு ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள்.
ஆனால், மூன்றாம் அலையின்போது யாழ். மக்களின் பொறுப்பற்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் யாழ். மாவட்டத்தில் மூன்றாம் அலையில் அதிகளவு கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.பல இடங்களில் கொத்தணிகள் உருவாகி பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்கள் சிலர் இரகசியமாக வெளியேறி வேறு பிரதேசங்களுக்குச் சென்று அன்றாட தொழில்களில் ஈடுபடுகின்றனர். இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் புலானாய்வுத் தகவல்கள் மூலமும், சுகாதாரப் பிரிவினரின் முறைப்பாடுகள் ஊடாகவும் இதனை நாம் அறிந்துகொண்டோம்.
எனவே, யாழ். மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்த முன்களப் பணியாளர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வடக்கில் யாழ். மாவட்ட மக்களுக்கே அதிகளவு கொரோனாத் தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.
இங்கு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அதிகம் என்றபடியால் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம். மேலும், தடுப்பூசிகள் வழங்கப்படும்” – என்றார்.