தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மகளின் கள்ளக்காதலனை பெற்றோர் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, உறவினர்கள் 6 பேரை கைது செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது, கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ஒரு வாலிபர் கிடப்பதும், காயத்துடன் அரை மயக்கத்தில் பெண் ஒருவர் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், திருவள்ளூர் எஸ்பி வருண்குமார், டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, ஒரு வாலிபர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தலையில் வெட்டுக் காயங்களுடன் மயக்கத்தில் இருந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தவர் திருவள்ளூர் அடுத்த வெள்ளரிதாங்கல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (37), வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. மேலும் காயத்துடன் கிடந்த பெண் மதுரவாயல் பகுதியை சேர்ந்த சத்யா (30) என்பதும் தெரியவந்தது.
சத்யாவுக்கும், மற்றொரு வெங்கடேசன் (38) என்பவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கத்தில் வசித்து வந்தனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு சத்யாவிற்கும் அவரது கணவர் வெங்கடேசனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். 3 பெண் குழந்தைகளுடன் சத்யா தனியாக வசித்து வந்தார். இவர், கணவரிடம் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர வழக்கறிஞர் வெங்கடேசனை நாடியுள்ளார்.
அப்போது, வழக்கறிஞர் வெங்கடேசனுக்கும், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியுள்ளது. இதை அறிந்து பெற்றோர் சத்யாவை கண்டித்துள்ளனர். மேலும், 3 மகள்கள் உள்ள நிலையில் கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் சத்யா அதை கேட்காமல் வழக்கறிஞர் வெங்கடேசனுடன் கள்ளத்தொடர்பை தொர்ந்துள்ளார். மேலும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் இடையூறு இல்லாமல் இருக்க சத்யா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருநின்றவூரில் குடியேறி அங்கு வசித்து வந்துள்ளார். பின்னர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடியேறியுள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு சத்யாவை பார்ப்பதற்காக வழக்கறிஞர் வெங்கடேசன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சத்யாவின் தந்தை சங்கர், தாய் சென்னம்மா, தங்கை சங்கீதா, தம்பி வினோத், தங்கையின் கணவர் வெங்கடேஷ், சித்தி தேவி ஆகியோர் சத்யாவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர்.
அப்போது சத்யா கதவை திறந்ததும் வீட்டுக்குள் கள்ளக்காதலன் வெங்கடேசன் இருப்பதை கண்டதும் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் தயாராக கொண்டு வந்த கத்தியால் வழக்கறிஞர் வெங்கடேசனை வெட்டினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தடுக்க வந்த சத்யாவையும் வெட்டியுள்ளனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர், இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தப்பிச் சென்றனர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிந்து, மதுரவாயல் பகுதியில் பதுங்கியிருந்த சத்யாவின் தந்தை சங்கர் (54), தாய் சென்னம்மா (47), தம்பி வினோத்குமார் (25), தங்கை சங்கீதா (23), தங்கை சங்கீதாவின் கணவர் வெங்கடேஷ் (30), சித்தி தேவி (36) ஆகிய 6 பேரையும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனுக்கு மகாலட்சுமி (25) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் 2.5 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.