ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்களையும், அதை குறைக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
சிலருக்கு தொடை பகுதியில் கொழுப்பு படிந்து காணப்படும். பொதுவாக நேராக நிமிர்ந்து நிற்கும்போது இடுப்பு பகுதியில் இருந்து மூட்டு பகுதி வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தொடைப் பகுதியில் தசைகள் குவிந்திருந்தால் அங்கு கொழுப்பு சேர்ந்திருப்பதாக அர்த்தம். அவை ‘சாடில் பேக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கொழுப்பை கரைப்பது சற்று கடினமானது. ஆனால் சாத்தியமற்றது அல்ல. சில எளிய பயிற்சிகள் மூலம் கொழுப்பு சேர்வதை தடுத்துவிடலாம். ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்கள்:
மரபியல்: தொடையின் வெளிப்புற பகுதியில் கொழுப்புகளை உருவாக்குவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய் அல்லது பாட்டி மூலம் மரபணு ரீதியாக ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினை தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
பருவமடைதல்: இளம் பெண்களாக வளர்ந்து பருவமடையும்போது மார்பகங்கள், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்கும். சில நேரங்களில் கூடுதல் கொழுப்புகள் தொடையின் வெளிப்புற பகுதிகளில் குவிந்துவிடும்.
கர்ப்பம்: ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினைக்கு கர்ப்பமும் மற்றொரு காரணியாக அமைந்திருக்கிறது. கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் பங்களிப்பு முக்கியமானது. இவை கர்ப்பகாலம் முழுவதும் சுரக்கக்கூடியது. இதில் ஈஸ்ட்ரோஜன், தொடைப் பகுதியுடன் வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு குவிவதற்கு காரணமாகிவிடுகிறது.
உட்காருதல்: உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாதது, ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். நாள் முழுவதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது உடல் இயக்கம் அதிகம் இல்லாததால் ரத்த ஓட்டம் குறையும். அது ‘சாடில் பேக்குகள்’ எனப்படும் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கு வழிவகுத்துவிடும்.
கொழுப்பு: உடலில் கொழுப்புகள் சேருவதற்கு இடம் கொடுப்பது ‘சாடில் பேக்குகள்’ பிரச் சினைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கும். உடலில் கொழுப்பு சதவீதத்தின் அளவை குறைப்பது ‘சாடில் பேக்குகள்’ உருவாக்கத்தை கட்டுப்படுத்திவிடும்.
உணவு: ஒரு நாளைக்கு மூன்று முறை சாலட் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஆரோக்கியமற்ற ‘ஜங்க் புட்’ சாப்பிடுவது தொடையில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்துவிடும். புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவை உண்ணுங்கள்.
முதுகு: முதுகின் அடிப்பகுதிக்கும், ‘சாடில் பேக்குகளுக்கும்’ இடையே நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதுகு பகுதி ஆரோக்கியமாக இருந்தால் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு.