கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
டயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வீட்டின் வறுமை காரணமாக முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக கடந்த வருடம் முதல் பணி புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த இளைஞர் ஒருவர், தனது மகளை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கியுள்ளதாக, உயிரிழந்த ஜூட் குமார் ஹிஷாலினியின் தாய் ஆர்.ரஞ்ஜனி நேற்றைய தினம் ஊடகங்களிடம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதன்போது,சிறுமியின் அறையில் 5 ஆயிரம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்ட பின்னர் இத்தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இளைஞர் தாக்கியமையால் பயந்து சிறுமி தனது தாயாரை அழைத்து தான் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில்,பொரளைப் பொலிஸாரும் குறித்த பணியாளரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, தான் தற்கொலை செய்வதற்காக தீ வைத்துக்கொண்டதாக சிறுமி கூறியதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சையளித்து வந்த வைத்தியரொருவர் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது ஒரு தற்கொலை என ஆரம்பகட்ட பரிசோதனையின் போது அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பரிசோதகர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில்,இந்த தகவல் வெளியாகியுள்ளன.
ஒன்றரை வருடங்களுக்கு முன் பூச்சிகளுக்கு விசுறுவதற்காக மண்ணெண்ணெய் போத்தலொன்று வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,அதைக் கொண்டு ஒரு லைட்டரால் சிறுமி தீ வைத்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை,சிறிய தீயைக் கண்டால் கூட அச்சப்படும் என்னுடைய மகள் தானாகவே தீ மூட்டிக் கொள்ளுமளவிற்கு தைரியமானவர் அல்ல. எனவே அவருக்கு யாரேனும் தீ வைத்திருப்பார்கள் என்று நூறு வீதம் சந்தேகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டு தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளதாவது, தொழிலுக்குச் செல்லுமாறு நாம் அவரை பலவந்தப்படுத்தவில்லை. அவர் விரும்பியே சென்றார்.
ஆண்களைப் பார்த்தால் விலகிச் செல்லும் பெண்பிள்ளை அவர். அவருக்கு என்ன நடந்தது என்று எமக்குத் தெரியாது. எனது மகள் சிறிய தீயைக் கண்டால் கூட அஞ்சுபவர். நாம் வீட்டில் தீ மூட்டினால் கூட அருகில் இருக்க மாட்டார்.
இவ்வாறு அச்சப்படுபவர் எவ்வாறு தனக்கு தானே தீ மூட்டிக் கொள்வார் என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது. அவர் தீ மூட்டிக் கொண்டிருக்க மாட்டார். யாரேனுமொருவரால் தான் தீ மூட்டப்பட்டிருக்கும். அவருக்கு தீ வைத்திருக்கிறார் என்று நூற்றுக்கு நூறுவீதம் நாம் சந்தேகிக்கின்றோம்.
கொரோனாவினால் எனக்கு தொழில் இல்லை. தொழில்புரிவதற்கு இடமில்லை. எனக்கு காலில் உபாதை காணரமாக கஷ்டப்பட்டு தொழில் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்.ரஞ்சனி (சிறுமியின் தாய்) – கொவிட் நெருக்கடி நிலைமையால் நான் பெரும் கடன் சுமைகளுக்கு உள்ளானேன். என்னுடைய கணவர் மற்றும் மகன் ஆகிய இருவருமே தொழில் இன்றியே காணப்பட்டனர். இதன் காரணமாகவே நான் கடன் சுமைக்கு உள்ளானேன்.
மகளை அனுப்பி வைப்பதற்காக தங்க நகையை அடகு வைத்து 30,000 பணம் வைத்திருந்தேன். நீங்கள் பணிக்கு சென்றால் பிள்ளைகளை பராமறிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மகளை பணிக்கு அனுப்பி வைக்குமாறு, அவரை அழைத்துச் சென்ற நபர் கூறினார். அதன் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் கடன் வழங்கியவர்கள் வீட்டு முற்றத்தில் வந்து கூச்சலிடுவார்கள்.
எனவே நான் தொழிலுக்குச் சென்று கடனை மீள செலுத்த உதவுவதாகவும் சகோதரனுக்கு மாத்திரம் இதனை செய்ய முடியாது என்று கூறியே என்னுடைய மகள் தொழிலுக்குச் சென்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,சிறுமி ஹிஷாலினியின் மரணத்தின் பின்னர் சமூக மட்டத்தில் இந்த சம்பவத்திற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இருப்பினும் சிறுமியின் மரணம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில்,இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கேள்வி பலர் மத்தியிலும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.