யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் – குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது அடாவடிக் குழுவினர் இன்று தீ மூட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
கடை உரிமையாளரும் அவரது மனைவியும் மனைவியாரது தம்பியும் கடையிலிருந்து தமது கடையின் பின்புறத்தே உள்ள வீட்டுக்குக் கடையில் உள்ள பொருட்களைக் கொண்டு சென்ற நேரம் கடை முன்பாக வந்த அடாவடிக் குழுவினர் பெற்றோல் போத்தலை எறிந்து தீ மூட்டியதுடன் கடை உரிமையாளரின் மனைவியின் மீது வாளால் வீச முற்பட்டுள்ளனர்.
இருப்பினும் தெய்வாதீனமாக குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்துள்ளார். அலறல் சத்தத்தையடுத்து கடையின் பின்புறம் நின்றவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோது தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பாதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார்.
இந்தச் சம்பவத்தால் கொக்குவில் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டனர்.