கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என காலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வாலிபர் தெரிவித்தார்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 17,466 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 66 பேர் பலியாகி உள்ளனர். மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.
எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கைகளிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை அடுத்த ஆலத்தூரைச் சேர்ந்த பிரனவ் (வயது22) என்ற வாலிபருக்கு 2 கைகளும் இல்லை.
பிறவியிலேயே கைகளை இழந்த பிரனவ், கால்களால் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். ஓவியம் வரைதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றையும் செய்கிறார். இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் ஆர்வமாக இருந்தார்.
ஆலத்தூர் பகுதியில் உள்ள சிறப்பு முகாமுக்கு பிரனவ் நேற்று தடுப்பூசி போடச் சென்றார். கைகள் இல்லாததால் தனக்கு காலில் தடுப்பூசி போடும்படி கேட்டுக்கொண்டார். இது பற்றி தடுப்பூசி முகாமில் இருந்த செவிலியர் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்டனர்.
அவர்கள் கொரோனா தடுப்பூசியை கால்களில் செலுத்திக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினர். இதையடுத்து வாலிபர் பிரனவுக்கு செவிலியர் காலிலேயே தடுப்பூசி செலுத்தினர்.
காலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வாலிபர் பிரனவ், கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். இதனால் தான் நான் கைகள் இல்லாத பிறகும் கால்களில் செலுத்திக் கொண்டேன் என அங்கிருந்த நிருபர்களிடம் கூறினார்.