முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயதான ஹிஷாலினி ஜூட் மரணம் குறித்து விசாரிக்கும் சிறப்பு பொலிஸ் குழு ஹட்டன் டயகம பகுதியில் உள்ள பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் டயகம பகுதிக்கு சென்ற சிறப்பு பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகரின் உறுப்பினர்களிடமிருந்தும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் முன்பு பணியாற்றி பல பெண்களிடமிருந்தும் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிமன்றின் உத்தரவின்படி, ஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்படும் என நினைத்து ஹிஷாலினி புதைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்துள்ளனர்.
எனினும், நேற்றைய தினம் சடலம் தோண்டியெடுக்கப்படவில்லை.
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரு உடலை மீள தோண்டி எடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளின்படி அடுத்த சில நாட்களில் சிறுமியின் சடலம் தோண்டியெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.