இலங்கையில் கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதை சட்டமாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று இடம்பெறும் கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
கொவிட் தடுப்பு செயலணியின் தலைவர் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோகர் லலித் வீரதுங்க நேற்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதனை கட்டாயமாக்கும் சட்ட கட்டமைப்பு இல்லை என்ற போதிலும் அது மிகவும் சிந்தித்து எடுக்க வேண்டிய தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடுகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளன. தடுப்பூசிகள் குறித்த பல்வேறு தவறான எண்ணங்கள் சமூகமயமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி கொவிட் கட்டுப்பாட்டிற்கு சிறந்த தீர்வு என்று பரிந்துரைத்துள்ளது.
எவ்வாறாயினும், தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்களை கிராம சேவகர் மூலம் பெற ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தகவலை பெற்ற பிறகு, தடுப்பூசி போடப்படாதவர்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.