வட மாகாணத்தில் கோவிட் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர், இதனை நாம் வரவேற்கின்றோம் என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் ஆரம்பத்தில் ஆர்வத்தைக் காட்டவில்லை. எனினும், அவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு மாகாண மக்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். கோவிட்டை விரட்டக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசியே.
எனவே, நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதில் அரசு அதிக சிரத்தையுடன் செயற்படுகின்றது.
தடுப்பூசிகளைப் பெற்றுவிட்டோம் எனக் கருதி சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் இருக்கக்கூடாது.
கோவிட் தடுப்புக்கான சுகாதார விதிகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.