அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் கோவிட் தொற்றினால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி. மோகனகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலயத்தில் பிரதேசத்தில் பி.சி. ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, பிரதேசத்தில் 1526 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து 200 பேர் கோவிட் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திருக்கோவில் பிரதேச சுகாதார அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றினால் இதுவரை ஒரு உயிரிழப்பும் ஏற்படாத பெருமையை பெற்றிருந்தோம். இருந்தபோதும் இன்று கோவிட் தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அந்த பெருமையை இழந்துள்ளோம்.
எனவே தடுப்பூசி மூலம் தாக்கத்தை குறைக்கலாமே தவிர நோய் தொற்று ஏற்படுவதனை தவிர்க்க முடியாது .
எனவே நாங்கள் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என இறுமாப்புடன் தேவையற்ற விதத்தில் தேவையற்ற ஒன்று கூடல் மற்றும் வீதியில் நடமாடுதல் ,களியாட்டங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதை தவிர்த்து தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமான முறையில் கடைப்பிடித்து எமது பிரதேசத்தை மீண்டும் வழமையான நிலைமைக்கு கொண்டுவர ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.