நடப்பு பொருளாதார பிரச்சனைகளுக்கு மத்தியில், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வை வழங்க முடியாது என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக அனைத்து அரச ஊழியர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள், கடந்த திங்கள்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன்போதே வரவு செலவுத் திட்டத்தில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பது என்று முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் வேதனத்தை உயர்த்த வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எனினும் ஆசிரியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் போது, தேசிய வேதன மற்றும் பணியாளர் ஆணைக்குழு ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் அதற்கு இணையான சேவைகளுக்குள் வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் பீரிஸ் தெரிவித்தார்.