டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இரு வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டு குறித்த இரு கண்டுபிடிப்பின் நோக்கம் குறித்து தனது கருத்துக்களை குறித்த மாணவன் வெளியிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“எனது பெயர் அப்துல் அமீர் முஹம்மது அதீப். அல் ஹிலால் பாடசாலையின் பழைய மாணவன். அத்துடன் தற்போது கல்முனை சாஹிரா பாடசாலையிலும் கல்வி கற்றுக் கொண்டு இருக்கிறேன்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக முகக் கவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளேன். அது மாத்திரமன்றி நாட்டில் கொரோனா வீரியமடைந்து டெல்டா பரவி வருவதன் காரணத்தால் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் களுக்கும் மற்றும் கோவிட் 19 நோயாளிகளும் பாவிப்பதற்காகவும் அவர்கள் அந்த கொடிய நோயில் இருந்து தப்புவதற்காகவும் இதை நான் கண்டு பிடித்துள்ளேன்.
இதை ஹெல்மெட் (தலைக்கவசம் ) போன்று அணிய வேண்டும். இதை அணிந்தவுடன் மாஸ்க் (முகக்கவசம்) அணிய தேவை இல்லை. இதை அணியும் வைத்தியார்களோ அல்லது நோயாளிகளோ கட்டாயம் கொரோனா பாதுகாப்பு ஆடை அணிய வேண்டும்.
மேலும் எனது கண்டு பிடிப்பை அங்கீகரித்து எமது நாட்டில் எதிர் காலத்தில் டெல்டா மற்றும் திரிவு படுத்திய கொரோனா வைரஸ் நோயில் இருந்து அனைவரையும் காப்பாற்ற அரச அதிகாரிகள் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.