சியோமி நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.சியோமி நிறுவனம் தனது வரலாற்றில் முதல்முறையாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் விற்பனை மாதாந்திர அடிப்படையில் 26 சதவீதம் வளர்ச்சி பெற்று இருந்தது.
மேலும் ஜூன் மாதத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாகவும் சியோமி இருந்தது. 2021 இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது.
2011 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் சியோமி இதுவரை சுமார் 80 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்த தகவல்கள் தனியார் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன.
“சர்வதேச சந்தையில் ஹூவாய் நிறுவனம் பின்னடைவை சந்திக்க துவங்கியது முதல் சந்தையில் முன்னணி இடத்தை பிடிக்க சியோமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹூவாய் மற்றும் ஹானர் பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்திய சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா போன்ற சந்தைகளில் சியோமி கூடுதல் கவனம் செலுத்த துவங்கியது.” என தனியார் ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வு பிரிவு இயக்குனர் தருன் பதாக் தெரிவித்தார்.