கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் செய்யப்பட்ட திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றரிக்கை கடந்த 6ஆம் திகதி அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால், நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் குறைந்த பட்சம் வாரத்திற்கு மூன்று நாட்கள் வருகைத்தர வேண்டும். அதற்கு ஏற்ற முறையில் குழுவொன்றை அமைத்து அந்த குழுவை நிறுவனங்களில் சேவைக்கு தொடர்ந்து அழைக்க வேண்டும்.
அத்துடன் கர்ப்பிணி மற்றும் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகள் கொண்ட தாய்மார்களை பணிக்கு அழைக்க கூடாது.
சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் என கருதப்படும் ஊழியர்களையும் பணிக்கு அழைக்க கூடாதென நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.