இலங்கையில் கொவிட் தடுப்பூசி ஏற்றியதை உறுதிப்படுத்தும் அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களுக்குள் செல்லும் போதும் குறித்த நபர் தடுப்பூசியைப் போட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் அந்த அட்டையை கட்டாயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் அதனைக் கட்டாயமாக்குவது குறித்து இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் வெகு விரைவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுவதுடன், 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவரையும் அதனை போட்டுக் கொள்ளுமாறு சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் கொழும்பில் இதுவரையில் ஒரு தடுப்பூசியேனும் போடாதவர்களைக் கண்டறிந்து அவர்களை தடுப்பூசியை போடச் செய்யும் வேலைத் திட்டத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டிலுள்ள அனைவருக்கும் முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் சுகாதார அட்டை பாவனையை கட்டாயமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.