திருமணம், பெண்களின் வாழ்க்கையில் மலரப்போகும் பூஞ்சோலை. அந்த புதிய வாழ்க்கையில் அவர்கள் இணைந்து மலர்ந்து மணம்வீச தாய்மார்கள் நேர்மறையான கருத்துக்களை மட்டும் கூறி இல்லறத்தில் கலந்து மகிழ ஊக்குவிக்கவேண்டும்.
“மகள்களை மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு தயார்ப்படுத்த வேண்டியது தாய்மார்களின் மிகப்பெரிய கடமை’’
“நான் தைரியமான பெண் என்பதை என் வாழ்க்கையில் பலமுறை நிரூபித்திருக்கிறேன். என் கல்லூரித் தோழிகள் சைக்கிள் ஓட்டவே பயந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நான் புல்லட் ஓட்டினேன். அதிலே தனியாக பயணித்து, மாநிலம் விட்டு மாநிலம் சென்றிருக்கிறேன். 16 வயதிலே எந்த பயமும் இன்றி துள்ளித்திரிந்த நான் இந்த 26-வது வயதில், மிக முக்கியமான தருணத்தில் ஏகப்பட்ட பயத்தோடு என்ன செய்வதென்றே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்..” என்ற அவள் கட்டுக்கோப்பான உடலுடனும், கம்பீரமான தோற்றத்துடனும் காணப்பட்டாலும், அவள் மனதில் கவலை சூழ்ந்திருப்பதை முகம் காட்டியது.
பிரபல நிறுவனம் ஒன்றில் எச்.ஆர். பிரிவில் அதிக சம்பளத்துடன் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறாள். அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கும் பணியாளர்கள் பலரது பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் பொறுப்பில் இருந்துகொண்டிருக்கிறாள். தற்காப்புக் கலைகளை கற்று அதிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
‘வாழ்க்கையில் மிக முக்கியமான தருணத்தில் பயத்தோடு இருந்துகொண்டிருப்பதாக சொன்னாயே! அந்த முக்கிய தருணம் என்பது என்ன?’ என்று அவளிடம் கேட்டேன்.
அவளுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாகவும், அவள் கல்யாணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் அப் போதுதான் சொன்னாள்.
‘எப்போது திருமணம்?’
“இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன..” என்றாள்.
இவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் இளைஞனின் படத்தை தனது செல்போன் ஸ்கிரீனில் வைத்திருக்கிறாள். அவனது தோற்றம் இவளைபோல் கம்பீரம் இல்லாமல், சாப்ட் ஆக இருந்தது. ‘அவரை உனக்கு பிடிக்கவில்லையா?’ என்று கேட்டபோது, அவள் கண்களில் இருந்து கண்ணீர் கவிழ்ந்தது.
“இப்படி ஒரு ஆணை நான் கற்பனைசெய்துகூட பார்த்ததில்லை. அவரிடம் பேசும்போதும், அவர் அருகில் அமர்ந்திருக்கும்போதும் என்னை நானே மறந்துவிடுகிறேன். அந்த அளவுக்கு அவர் என் மீது அன்பு செலுத்துகிறார். அப்படிப்பட்ட அன்பை என் தாயிடம், தந்தையிடம் இருந்துகூட நான் பெற்றதில்லை..” என்று நெகிழ்ச்சியாகக்கூறி ஆச்சரியப்படுத்தினாள்.
இவ்வளவு அன்பு செலுத்தும் ஒருவர் எந்த பெண்ணுக்கு கணவராக அமைந்தாலும் அவள் மகிழ்ச்சியின் உச்சத்திற்குதான் செல்ல வேண்டும். ஆனால் இவளோ பயத்தின் உச்சத்தில் அல்லவா நின்றுகொண்டிருக்கிறாள். அதற்கு காரணம் தனது அம்மாதான் என்று தயங்கித் தயங்கி சொன்னாள்.
“எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து மூன்று மாதங்கள் ஆகியிருக்கின்றன. நிச்சயதார்த்தம் நடந்த இரண்டொரு நாளிலே அம்மா என்னை பயங்காட்ட தொடங்கிவிட்டார். கடைசி நேரத்தில் திரு மணம் நின்றுபோகும் பத்திரிகை செய்திகளையும் மற்றும் அது போன்ற காட்சிகள் இடம்பெறும் டெலிவிஷன் நாடகங்களையும் பார்த்துவிட்டு, ‘உன் வாழ்க்கையிலும் அதுபோல் நடந்துவிட்டால் என்ன செய்வாய்?’ என்று என்னிடம் கேட்கிறார். திருமணத்திற்கு முதல்நாள் வரன் திருமணம் வேண்டாம் என்று நிராகரிப்பது, தனது காதலியோடு திருமணத்திற்கு முன்பு ஓடிப்போவது, திருமணத்திற்கு முன்பு காரணம் சொல்லிக்கொள்ளாமல் தற்கொலை செய்வது போன்ற செய்திகளை எல்லாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி என்னிடம் திருமணத்தை பற்றிய அச்சத்தை உருவாக்கிக்கொண்டே இருந்தார்..” என்று பயம் உருவாகிய விதத்தை விளக்கிய அவள், அம்மாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தனக்குள் கூடுதல் அதிர்ச்சி அலைகளை உருவாக்குவதாக தெரிவித்தாள்.
எப்படி?
“உனது கணவன் உன் மீது எவ்வளவு அன்புகாட்டினாலும், அவரை நம்பிவிடாதே. எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாது. அதனால் அவரை நம்பி உன்னை முழுமையாக ஒப்படைத்துவிடாதே. படிப்பையும், புத்திசாலித்தனத்தையும்வைத்து வேலைபார்த்து பணம் சம்பாதிக்க மட்டுமே உனக்கு தெரியும். ஆணை புரிந்துகொள்ள என் அனுபவம்தான் உதவும். அதனால் திருமணத்திற்கு பின்பு தினமும் காலையில் என்னிடம் நீ பேசவேண்டும். நான் சொல்வதுபோல்தான் நீ நடந்துகொள்ளவேண்டும்.
உன்னிடம் அவன் (வருங்கால கணவன்) அதிர்ந்து பேசினாலோ, அடிக்க கையை ஓங்கினாலோ, நீ ஆசைபட்டபடி நடந்துகொள்ளாமல் இருந்தாலோ, உடனே நீ இங்கே நம் வீட்டிற்கு ஓடிவந்துவிடவேண்டும். நீ உன் கணவனை பிரிந்துவந்தால் நான் உன்னிடம் எந்த கேள்வியும் கேட்கமாட்டேன். உடனடியாக அவனை விவாகரத்து செய்துவிட்டு, உனக்கு அவனை விட சிறந்தவனை தேடிப்பிடித்து மறுமணம் செய்துவைப்பேன் என்று என் அம்மா புலம்பிக்கொண்டே இருக்கிறாள்..” என்றாள்.
தாயின் இந்த புலம்பல், அவளிடம் திருமண வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையை இழக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ‘எந்த ஆணையும் நம்பாதே!’ என்ற வார்த்தை அவளது மனதுக்குள்ளே சுற்றி சுழன்றடித்து, தனது வருங்கால கணவனை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. அதனால் வருங்கால கணவர் தன்னிடம் காட்டுவதெல்லாம் போலித்தனமாக அன்பு என்பதுபோல் கருத தொடங்கியிருக்கிறாள்.
“யாரை நம்புவது என்று எனக்கு தெரியவில்லை. இப் படியே நான் இருந்தால் திருமணமான நான்காவது நாளே நான் என் கணவரை பிரிந்து என் தாயிடம் போய் சேர்ந்துவிடும் நிலை உருவாகிவிடும்” என்று அவள் தலையை பிடித்துக்கொண்டு மேஜை மீது கவிழ்ந்தபோது, அவளது பொறுப்பற்ற தாயாரை நினைத்து வேதனைகொள்ளும் நிலை ஏற்பட்டது.
எரிகிற கொள்ளியை இழுத்து அணைத்தால்தான் கொதிப்பது அடங்கும் என்பதுபோல், தாயாருக்கு கவுன்சலிங் கொடுத்து அவரது எதிர்மறையான கருத்துக்களை தடுக்கவேண்டியதிருந்தது. பின்பு வருங்கால கணவன் மூலம் அவளுக்கு அதிக நம்பிக்கை ஊட்டப்பட்டது. தியானம் மற்றும் மியூசிக் தெரபி மூலம் அவள் மனமும் இயல்புக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அதில் எதுவும் அத்தனை எளிதாக இருக்கவில்லை என்பதை சமூக நலன் கருதிகூற வேண்டியதிருக்கிறது.
பெரும்பாலான இளம்பெண்கள் வெளிஉலகத்தில் தைரியமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் தாயாரின் முந்தானையை பிடித்துக்கொண்டு நடக்கும் எடுப்பார் கைப்பிள்ளை போன்ற மனநிலையில்தான் இன்றும் இருந்துகொண்டிருக்கிறார்கள். சில தாய்மார்கள், தங்கள் மகள்கள் எப்போதும் தங்கள் கைப்பிள்ளை போல்தான் இருக்கவேண்டும் என்று கருதி, அவர்களை பயப்படுத்தியே தங்கள் காலடிக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
அம்மாக்களின் அனுபவம் என்பது பழைய புத்தகம். அதில் பலன்தரும் கருத்துக்கள் நிறைய உண்டு. ஆனால் அதுவே காலத்தின் கண்ணாடி அல்ல. அம்மாக்களின் கருத்துக்களை எல்லா தருணங்களிலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இ்ல்லை. புதிய கருத்துக்களும், புதிய சிந்தனைகளும் பெண்களிடம் இருக்கவேண்டும். தைரியத்தைவிட தன்னம்பிக்கை இன்றைய இளம்பெண்களுக்கு அதிகம் தேவை.
இந்த உலகமும், உலக மக்களின் வாழ்க்கையும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நடந்துகொண்டிருக்கிறது. திருமண வாழ்க்கையின் ஆதாரமே நம்பிக்கைதான். அதை சிதைக்கும் விதத்தில் அம்மாக்கள் நடந்துகொள்ளக்கூடாது. நம்பிக்கையையூட்டி நல்வாழ்க்கைக்கு தான் வழிகாட்டவேண்டும்.
இன்று சில இளம்பெண்கள் திருமணம் வேண்டாம் என்று கூறும்போதும், பருவம் கனிந்த பின்பும் திருமணம் இப்போதுவேண்டாம் என்று பல வருடங்கள் தள்ளிவைக்கும்போதும், திருமணம் செய்து கொள்ளாமலே வாழப்போகிறேன் என்று களமிறங்கும்போதும், அந்த இளம்பெண்களை தான் பலரும் குறை சொல்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு முடிவை அந்த பெண்கள் எடுக்க அவர்களது அம்மாக்களும் ஏதாவது ஒருவகையில் காரணமாக இருக்கிறார்கள்.
திருமணம், பெண்களின் வாழ்க்கையில் மலரப்போகும் பூஞ்சோலை. அந்த புதிய வாழ்க்கையில் அவர்கள் இணைந்து மலர்ந்து மணம்வீச தாய்மார்கள் நேர்மறையான கருத்துக்களை மட்டும் கூறி இல்லறத்தில் கலந்து மகிழ ஊக்குவிக்கவேண்டும். எதிர்மறையான கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதை தவிர்க்கவேண்டும்.