சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளை நீக்கும் வழிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் தன் வீட்டிலிருந்தே தொடங்கினால் நாடு தானாக மாறி முன்னேற்றமடையும்.
‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’
என்ற பாரதியின் உணர்வை இந்திய திருநாட்டில் வளர்கின்ற ஒவ்வொரு மாணவனும் பெறவேண்டும். இந்த நாட்டில் மதத்தால், மொழியால், இனத்தால் பழக்கவழக்கத்தால் வேறுபட்டவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் எண்ணம், சொல், செயலால் ஒன்றுபட்டு விளங்கினால் தான் எப்போது ஒன்றுபட்ட இந்தியாவை காணமுடியும். இன்றைய மாணவர்களே நாளைய ஆட்சியாளர்கள். எனவே மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு அவசியம். அதனை வளர்ப்பதில் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.
உலகம் ஒரு குடும்பமாக வேண்டும் என்ற உணர்வு மேம்பட்டு வருகின்றது. உலக நாடுகள் தமக்குள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் இமயம் முதல் குமரி வரையுள்ள அனைவரும் பாரதத்தாயின் மக்கள் என்ற உணர்வு மாணவ பருவத்திலே ஏற்படவேண்டும்.
நம்நாடு வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வியத்தகு முன்னேற்றமடைந்து வருகின்றது. இதனை காணும் அந்நிய சக்திகள் நம் ஒற்றுமையை உருக்குலைக்க சூழ்ச்சி வலை விரிக்கின்றன. நம் இளைஞர்களில் சிலர் அதில் சிக்கிக்கொண்டு நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் சிலர் மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் மக்களிடையே நச்சு விதைகளை தூவி நல்ல உள்ளங்களை கெடுத்து வருகின்றனர். மாணவர்கள் அவற்றில் அகப்படாமல் அவர்களது தீய எண்ணங்களை அழித்து ஒற்றுமை காக்க முன்வரவேண்டும்.
பொதுவாக அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெருமையுடையது. இதனால் மொழிகளுக்குள் வேறுபாடு காட்டாது அனைத்து மொழிகளையும் சமமாக மதித்து போற்றுவதில் மாணவர் கடமை மகத்தானது. தாய்மொழியோடு பிற மொழிகளையும் கற்று பயனடையவேண்டும்.
‘பாருக்குள்ளே தெய்வம் ஒன்று- இதில்
பற்பல சண்டைகள் வேண்டா’
என்ற பாரதியின் உணர்வை ஒவ்வொரு மாணவனும் உணர்ந்து செயல்படவேண்டும். மதங்களின் பெயரால் மாறுபட்டுள்ள மனித உள்ளங்களை திருத்த முயலவேண்டும். சாதி இரண்டொழிய வேறில்லை, பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், எவ்வுயிரும், தம்முயிர்போல் எண்ண வேண்டும் என்ற முன்னோர்களின் கருத்தை மக்களிடம் எடுத்து கூறவேண்டும். பிறப்பினால் மனித இனத்தினிடையே எவ்வித வேறுபாடு இல்லை என்பதை உணர்த்த வேண்டும். சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளை நீக்கும் வழிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் தன் வீட்டிலிருந்தே தொடங்கினால் நாடு தானாக மாறி முன்னேற்றமடையும்.
கல்வி பயிலும் மாணவர்கள் தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், தேசிய நல இயக்கங்கள் போன்ற இயக்கங்களில் ஆர்வத்துடன் சேர்ந்து தேசிய ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். மேலும் இயக்கங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு ஒருமைப் பாட்டை விளக்கும் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டலாம். ஆண்டுக்கொரு முறையாவது பிற மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வருவதன் மூலமும், தேசிய விழாக்களை நாட்டுப்பற்றுடன் நடத்துவதன் மூலமும், பிற மாநில மக்களின் கலை, நாகரிகம், பண்பாட்டை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர வழி ஏற்படும்.