புத்தல, கட்டுகஹகல்கே குளத்தில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள்து.
சம்பவத்தில் மொனராகலை மஹாநாம தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் கே.பி. கௌஷான் (19), ரந்தில் தாருக (19), தனஞ்சய தேஷான் (18) ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த மாணவர்கள் மொனராகலை நகருக்கு அருகில் உள்ள சிறிகல, பதுகம்மன மற்றும் இரத்தினபிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், நேற்று முன்தினம் (14) காலை நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாக தெரிவித்து, தங்களது வீடுகளிலிருந்து, மூவரும் 2 மோட்டார் சைக்கிளில் குளத்திற்குசென்றுள்ளனர்.
மாலை வரை மூவரும் வீடுகளுக்கு திரும்பவில்லை என்பதுடன் அவர்களது தொலைபேசி தொடர்பும் இருக்கவில்லை. இதையடுத்து, அவர்களது பெற்றோர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில், இளைஞர்கள் நண்பகல் அளவில் மொனராகலையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருளை பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, புத்தலவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் , புத்தல, கட்டுகஹகல்கே குளத்திற்கு அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 3 தலைக்கவசங்கள், பிஸ்கட்கள், மொபைல் போன்கள், ஆடைகள் இருப்பதை அவதானித்த ஒருவர் அது தொடர்பில் நேற்று முற்பகல் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதன்பின்னர் , பிரதேசவாசிகளுடன் இணைந்து புத்தல பொலிஸார் குளத்தின் வான் கதவின் அடியில் இளைஞர்கள் சிக்கியிருந்த நிலையில், சுழியோடிகளின் உதவியுடன் அவர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.
இளைஞர்களின் சடலங்கள் மீதான மரண விசாரணைகளை வெல்லவாய மரண விசாரணை அதிகாரி எச்.எம்.ஜே. ஹேரத் மேற்கொண்டதுடன் , சட்டநடவடிக்கைகளின் பின்னர் சடலங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.