அவர்களை நான் காத்திருக்கிறேன். அவர்கள் கண்டிப்பாக என்னைத் தேடி வருவார்கள். என்னைப் போன்றவர்களை கொல்வது அவர்களுக்கு எளிது என தாலிபான் தொடர்பில், ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் தெரிவித்துள்ளார்.
தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாட்டு துருப்புகள் வெளியேறிய சில வாரங்களில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் ஒவ்வொன்றாக கைப்பற்றி, இறுதியில் கடந்த ஞாயிறன்று தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்து, ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
இதனிடையே, ஜனாதிபதி அஷ்ரஃப் கானி நாட்டைவிட்டு வெளியேற, தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து பல ஆயிரம் மக்கள் ராணுவ விமானங்களில் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் கூறிய கருத்துகள் அதிக முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது. தாலிபான்கள் கண்டிப்பாக தம்மை தேடி வருவார்கள், தம்மை கொல்வார்கள் என கூறும் Zarifa Ghafari, தற்போதைய சூழலில் தம்மையோ அல்லது தமது குடும்பத்தையோ தாலிபான்களிடம் இருந்து காப்பாற்ற யாராலும் முடியாது என்கிறார்.
27 வயதான Zarifa Ghafari ஆப்கானிஸ்தானின் Wardak பிராந்தியத்தில் முதல் பெண் மற்றும் மிக இளவயது மேயராக பணியாற்றி வருகிறார். தாலிபான்களின் ஆட்சி என்பது கொடூரமானது என்பதை உணர்ந்து பயப்படும் ஆப்கான் பெண்களின் குரலாகவே இவரது கருத்துகள் பார்க்கப்படுகிறது.
கல்வியறிவு பெற்று, எந்த அச்சுறுத்தலும் இன்றி வேலைக்கு செல்கின்ற, சுதந்திர உணர்வு கொண்ட பெண்களின் வாழ்க்கை இனி தாலிபான்களின் துப்பாக்கி முனையின் கீழாகிவிடும் என அச்சப்படுகின்றனர் இங்குள்ள பெண்களும் சர்வதேச சமூகமும்.
உயர்க்கல்வி பெற்ற பெண்கள் தங்கள் சான்றிதழ்களை மிகுந்த வலியுடன் மறைத்து வைக்கின்றனர். இனி என்னாகும் என தெரியாது என கூறும் Zarifa Ghafari, ஆனால் இளம் சமூகத்தினர் கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் தெளிவு பெற்றுள்ளனர் எனவும், அவர்கள் சமூக ஊடகங்களில் உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் தெரிந்து கொள்கின்றனர் எனவும், அவர்கள் இனி நாட்டின் வளர்ச்சிக்காவும் பெண்களின் உரிமைக்காகவும் போராடுவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2018 முதல் மேயராக பணியாற்றி வரும் Zarifa Ghafari, என்னால் எனது வீடு, குடும்பம், இந்த சமூகத்தை விட்டு வெளியேற முடியாது, ஆனாலும் நான் எங்கே சென்றுவிட முடியும் என உதவியற்ற நிலையில் கேள்வி எழுப்பியுள்ளார் ஆப்கான் வரலாற்றின் ஒரு பாகமான Zarifa Ghafari.