மத்திய தரைக்கடல் நாடுகள் சிலவற்றில் வேகமாக காட்டுத்தீ பரவி வரும் நிலையில், பிரான்சில் பரவி வரும் காட்டுத்தீ இருவரை பலிகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, St Tropez என்ற பகுதியில் பரவி வரும் தீயை அணைக்க, மூன்றாவது நாளாக 1,200 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இதற்கிடையில், Grimaud என்ற நகருக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்று தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. அந்த வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள், அங்கு இரண்டு பேர் தீயில் கருகி உயிரிழந்து கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அவர்களில் ஒருவர் ஆண், மற்ற நபர் ஆணா பெண்ணா என அடையாளம் காணக்கூட முடியாத அளவில் அவரது உடல் எரிந்துபோயுள்ளது.
காட்டுத்தீ காரணமாக சுமார் 7,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
நாளுக்கொரு நாட்டில் காட்டுத்தீ குறித்த செய்திகளைக் கேட்கும்போது, புவி வெப்பமயமாதல் குறித்து இயற்கை ஆர்வலர்கள் விடுத்த எச்சரிக்கைகளை துச்சமாக எண்ணியதன் பலனை உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறதோ என்றே எண்ணத்தோன்றுகிறது