ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்கள் காபூலை அடைந்ததும், பெருங்கூட்டம் மக்கள் தப்பிச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தை அடைந்தார்கள்.
ஆனால், அவர்களால் எதிர்பார்த்தபடி தப்பிச் செல்ல இயலாததால், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றும் எண்ணத்தில், விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை தாண்டி தங்கள் குழந்தைகளை மறு பக்கம் நின்றிருந்த இராணுவ வீரர்களிடம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின.

மூன்று குழந்தைகள் வரை அப்படி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அப்படி கொடுக்கப்பட்ட ஒரு குழந்தையை அமெரிக்க வீரர் ஒருவர் வாங்கி தன் சக வீரரிடம் கொடுக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.
அந்த குழந்தை ஒரு பெண் குழந்தை என்றும், அந்த குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாலேயே அது அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என மேஜர் ஜின் ஸ்டெஞ்சர் கூறியுள்ளார்.
மேலும், விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கபட்டபின், மீண்டும் அந்த குழந்தை அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது அந்த குழந்தையும் அதன் பெற்றோர்களும் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என பென்டகன் செய்தித்தொடர்பாளரான ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.




















