கொரோனா தொற்றாளர்கள் பயன்படுத்தும் ‘பெரசிட்டமோல்’ மாத்திரை தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை அரசாங்கம்.
கொவிட் -19 வைரஸை ஒழிப்பதற்கான மருந்துகள் எவையும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இலங்கையில் விற்றமின் சி மற்றும் டீ உள்ளிட்ட மாத்திரைகளும் , ‘பெரசிட்டமோல்’ உள்ளிட்ட சில மருந்துகளே கொவிட் தொற்றாளர்களுக்கு வழங்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒளடதங்கள் தொடர்பான பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் பிரியதர்ஷனி கலப்பதி தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கொவிட் -19 வைரஸை ஒழிப்பதற்கான மருந்துகள் எவையும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.
எனினும் விற்றமின் சி மற்றும் டீ உள்ளிட்ட மாத்திரைகளே எமது நாட்டில் தொற்றாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன் தொற்றின் காரணமாக ஏற்படும் காய்ச்சல் என்பவற்றைக் குறைப்பதற்கு ‘பெரசிட்டமோல்’ மாத்திரை வழங்கப்படுகிறது. ‘பெரசிட்டமோல்’ மாத்திரைகள் தொடர்பில் சில முக்கிய விடயங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும். ஒரு தடலையில் இரு மாத்திரைகள் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு மூன்றுவேளை ‘பெரசிட்டமோல்’ எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
இதன்போது முதல்வேளை இரு மாத்திரைகளை எடுத்து 6 மணித்தியாலங்கள் நிறைவடைய முன்னர் அடுத்த மாத்திரையை எடுக்கக் கூடாது. அதேபோன்று சிறுவர்களுக்கு அவர்களின் எடை அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். அதாவது ஒரு கிரோ கிராம் நிறைக்கு 10 – 15 மில்லி கிராம் வழங்க்கபட வேண்டும்.
உதாரணமாக 10 கிலோ கிராம் எடையுடைய குழந்தையாயின் 100 – 150 மில்லி கிராம் வழங்கப்பட வேண்டும். இதனை விட குழந்தைகளுக்கு ‘பெரசிட்டமோல்’ பாணி ஒரு தேக்கரண்டி கொடுப்பது பொருத்தமானது. மேலும் தவிர காய்ச்சல் அல்லது உடல் உபாதைகளைப் குறைப்பதற்கு வேறு எந்த மருந்துகளையும் இந்த சந்தர்ப்பத்தில் உட்கொள்ளக் கூடாது.
கொவிட் -19 நிமோனியா நிலை ஏற்படும் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கு பிரத்தியேக மருந்து உபயோகிக்கப்படுகிறது. அதேபோன்று குருதி உறைதல் நோய்க்கு உள்ளாகுபவர்களும் வேறு தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றன. கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் வேறு தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாயின் அவர்கள் தமக்கான மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.