சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் 12 தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக மருத்துவர் தினுஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.
மையத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தடுப்பூசியை வழங்கியதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஏராள மானோருக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி மையத்தில் பைசர் தடுப்பூசியைப் பெற முடியாமல் போயுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் நேற்று முன்தினம் ஒரு மருத்துவரின் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி போடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப சுகாதார சேவைகள் பிரிவின் பெண் ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவர் ஒருவரும், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டில் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளதாகவும் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.