பிரித்தானியா முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. இதன்பிரகாரம் பிரித்தானியா முழுவதும் 80 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் கூறியுள்ளது.
பிரித்தானியாவின் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து என நான்கு பிராந்தியங்களிலும் கொரோனா தொற்றானது அதிகரித்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 08 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் லண்டன், யோர்க்ஷெயார் மற்றும் ஹம்பர் பிரதேசங்களை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றானது அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் தொற்றுக்கு உள்ளாகும் ஒருவர் ஏனையவர்களுக்கும் தொற்றை பரப்பும் எண்ணிக்கையை கணிப்பிடும் ஆர். எண்ணிக்கையும் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வட அயர்லாந்தில் 40 இல் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் புள்ளிவிபரங்கள் கணக்கெடுக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதிகமான தொற்று எண்ணிக்கை வட அயர்லாந்தில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் 70 இல் ஒருவருக்கும் வேல்ஸ்சில் 120 பேரில் ஒருவருக்கும் ஸ்கொட்லாந்தில் 140 பேரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஸ்கொட்லாந்தில் நாளாந்த தொற்று எண்ணிக்கை முதல் முறையாக 06 ஆயிரத்தை விட அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் 05 ஆயிரத்து 21 ஆக பதிவாகியிருந்த கொரோனா தொற்றானது நேற்று 06 ஆயிரத்து 835 ஆக உயர்வடைந்துள்ளதாக ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்ரேஜன் கூறியுள்ளார்.
ஒக்டோபர் 02 ஆம் திகதி ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் எலிசெபெத் மாகராணி உரையாற்றவுள்ளார். இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கமீலா ஆகியோரும் நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வேல்ஸ் சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இளையோர் தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் தகுதியுள்ள 94 வீதமானவர்களும் இரண்டு கட்ட தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், அவர்களில் அதிகமான மக்கள் மூன்றாம் கட்ட தடுப்பூசி மருந்தையும் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.



















