2021 வாக்காளர் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட மாட்டாது.
தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் திணைக்களம் நேற்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் வாக்காளர் ஒருவரின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால், 2021 ஆம் ஆண்டிலும் அதே முகவரியின் கீழ் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதற்காக எந்த படிவத்தையும் பூர்த்தி செய்யத் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு இந்த நாட்களில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலும் பார்வைக்கு வைக்கப்பட இருந்தது. இருப்பினும், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மறு அறிவித்தல் வரை இச் செயல்முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளராக பதிவு செய்வதை தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளம் மூலம் சரிபார்க்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் இதில் தமது பெயர் உள்ளடக்கப்படவில்லை என்றால், அவ்வாறானோர் உடனடியாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.