நாட்டில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது அல்லது தளர்த்துவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி இன்று கூடவுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது.
இதனால் கடந்த மாதம் 20ம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30ம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு பின்னர் 6ம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
இதேவேளை, நாடு முழுதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்படி இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நாளாந்தம் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்துள்ள நிலையில் அதனைக் கவனத்திற்கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சுகாதார நிபுணர்கள் பலரும் ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க வேண்டும் என கோரிவருகின்றனர்.
இவ்வாறான நிலையில், கோவிட் வைரஸ் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி இன்று கூடவுள்ளதாகவும், இதன்போது ஊரடங்கு தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.