உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போல மீண்டுமொரு தாக்குதலை நடத்தும் ஆபத்து இலங்கையில் இருப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் அவர் இந்த எச்சரிக்கையை முன்வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும், சிவில் மற்றும் நபர்களின் ஊடாக பாதுகாப்பு பிரிவை அதைரியப்படுத்தும் வகையிலான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதற்கான சூழ்ச்சி நாட்டிற்குள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் இருக்கிறது.
மிகச்சிறிய பாதுகாப்பு விரிசலைப் பயன்படுத்தி அதனூடாக ஈஸ்டர் தாக்குதலைப் போன்ற ஒரு தாக்குதலை நடத்த அடிப்படைவாத அமைப்புகள் திட்டமிட்டுவது போன்ற பாரிய ஆபத்து நாட்டிற்கு முன்பாக இருக்கின்றது.
அதனால் அடிப்படைவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறியத்தக்கதாக பாதுகாப்புக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான அவசியம் உள்ளது.
அத்துடன் நாட்டில் செயற்படுகின்ற மேலும் சில அடிப்படைவாத மற்றும் இனவாத அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.