கோவிட் தடுப்பூசி நிறுவனங்களில் ஒன்றான சினோபார்ம் உற்பத்தி நிறுவனத்தின் கிளையொன்றை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றதாக தெரியவருகிறது.
சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் Liu Jingzhen இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசிகளை மீள்நிரப்பும் ஓர் மத்திய நிலையத்தினை இலங்கையில் ஸ்தாபிப்பது குறித்து ஆர்வம் காட்டுவதாக நிறுவனத்தின் தலைலவர் தெரிவித்துள்ளார்.
சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹணேவை சந்தித்து இது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி விநியோகம் செய்தமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நன்றி பாராட்டிய கடிதம் சினோபார்ம் நிறுவனத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி விநியோக பொறிமுறைமையில் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சினோபார்ம் நிறுவனத் தலைவர் Liu Jingzhen தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சினோபார்ம் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதுடன், 50க்கும் மேற்பட்ட அரச தலைவர்களும் இந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.