- விநாயகர் சிலை விற்பனை பல இடங்களில் இரவு நீண்ட நேரம் வரையிலும் நீடித்தது. இருப்பினும் இன்று காலையும் விநாயகர் சிலை மற்றும் பொருட்களின் விற்பனை களைகட்டி இருந்தது.
சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பெரிய சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் சிலைகள் தயாரிக்கும் பணி முடங்கி இருந்தது. பெரிய சிலைகள் விற்பனைக்கு வரவில்லை.
அதே நேரத்தில் வண்ண மயமான சிறிய சிலைகள் விற்பனை இந்த முறை சூடுபிடித்து காணப்பட்டது. சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து இடங்களிலும், சாலை ஓரங்களிலும், வணிக பகுதிகளிலும் சிறிய சிலைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதனை மக்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் வந்து அதிக ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
நேற்று காலையில் தொடங்கிய விநாயகர் சிலை விற்பனை பல இடங்களில் இரவு நீண்ட நேரம் வரையிலும் நீடித்தது. இருப்பினும் இன்று காலையும் விநாயகர் சிலை மற்றும் பொருட்களின் விற்பனை களைகட்டி இருந்தது.
புரசைவாக்கம் தானா தெருவில் களிமண் சிலைகள் மற்றும் வித விதமான வண்ணங்களில் அலங்காரம் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் குடைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவையும் அதிகளவில் விற்பனையானது.
சிறிய விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்வதில் குழந்தைகளிடம் அதிக ஆர்வம் காணப்பட்டது. தங்களின் பெற்றோரை அழைத்து வந்து தங்களுக்கு பிடித்தமான விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றனர்.
இதுதொடர்பாக விநாயகர் சிலை விற்பனையாளர் ஒருவர் கூறும் போது, ‘‘சென்னையில் சிறிய சிலைகள் மட்டும் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி உள்ளது’’ என்று தெரிவித்தார்.