ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நம்பிக்கை தெரிவித்தார்.
ஜூம் கலந்துரையாடலில் பங்கேற்ற போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
12-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகள் மீண்டும் தொடங்க அந்த வயதினருக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
உலக சுகாதார நிறுவனம் உட்பட சர்வதேச நிறுவனங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பல அளவுகோல்களை சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடங்கியவுடன், தரம் 7 முதல் தரம் 13 வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். தடுப்பூசியின் முதல் டோஸ் 34% க்கும், இரண்டாவது டோஸ் 20-29 வயதிற்குட்பட்டவர்களுக்கு 12% க்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.