தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை உள்பட கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக ‘நீட்’ தேர்வு அறிவிப்பு சற்று தாமதமாக வெளியான நிலையில், நாடு முழுவதும் இந்த தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அதன்படி, நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
இவர்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது.
மொத்தம் 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கையை 155-ல் இருந்து 202 ஆக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் கூடும்.
நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இந்த தேர்வை சந்திக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை (தஞ்சையில்) என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களில் 19 ஆயிரத்து 867 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வை தமிழில் எழுத விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 888 மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் தேர்வு நடக்கிறது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 33 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்து 992 பேர் எழுதுகிறார்கள்.
அந்த வகையில் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை உள்பட கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு, ‘நீட்’ தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர தேர்வு அறைக்கு வரும் மாணவர்கள் தங்கள் கையில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் தவிர வேறு எதுவும் எடுத்து வரக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர கூடுதல் அறிவுரைகள் மாணவர்களின் ஹால்டிக்கெட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நீட்’ தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிதாக ‘என்95′ முக கவசம் வழங்கப்படும் என்றும், அந்த முக கவசத்தை அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருக்கிறது. மேலும், தேர்வு அறைக்குள் மாணவர்கள் ஹால்டிக்கெட், சானிடைசர் பாட்டில், தெளிவாக தெரியக்கூடிய குடிநீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் தேர்வு நடைபெற இருப்பதால், ஹால்டிக்கெட்டின் முதல் பக்கத்தில், கொரோனா தொடர்பான சில விவரங்களை பூர்த்தி செய்ய தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக தேர்வுக்கு முந்தைய 14 நாட்களில் கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இருந்ததா?, நோய் அறிகுறி இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தீர்களா? என்பது உள்பட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதனை தேர்வர்கள் முறையாக பூர்த்தி செய்வது அவசியம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
அதேபோல் தேர்வு நடைபெறும் மையத்துக்கு பிற்பகல் 1 மணியில் இருந்து வரத்தொடங்கலாம் என்றும், 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும், அதன்பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.