திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பபுருகஸ்ஹின்ன காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவெவ – நாமல்வத்த கல்கந்த சயில பப்பதாராம விகாரையின் முன்னால் விகாராதிபதி (49 வயது) என தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த பௌத்த பிக்குவை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் போலியான தகவல்களை வழங்கி வருவதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது நாமல்வத்த – கல்கந்த சயில பப்பதாராம விகாரையின் பிக்கு இல்லை எனவும், அவர் போலியான முகவரியை வழங்கியுள்ளதாகவும் தெவனிபியவர விஜயராஜ விகாரை விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன தேரர் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட பிக்கு ஏற்கனவே நாமல்வத்த – கல்கந்த விகாரையில் விகாராதிபதியாக இருக்கும் போது புதையல் தேடி வருவதை அவதானித்த, விகாரைக்கு பொறுப்பான குழுவினர் அவரை விகாரையில் இருந்து விலக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.