வவுனியாவில் திறக்கப்பட்டு, சுகாதார நடைமுறைகளின்றி வியாபாரத்தில் ஈடுபட்ட 4 மதுபானசாலைகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டில் சில மதுபானசாலைகள் நேற்று மாலை திறக்கப்பட்டன.
அந்தவகையில், வவுனியாவிலும் சில மதுபானசாலைகள் திறக்கப்பட்டமையால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மதுபானசாலைகள் முன்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது திரண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிகளுக்கு விரைந்த சுகாதாரப் பிரிவினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி குறித்த மதுபானசாலைகளை மூடுமாறு பணித்துள்ளதுடன், மதுபான கொள்வனவிற்கான திரண்டிருந்தவர்களையும் பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றியுள்ளனர்.
மேலும், சுகாதார நடைமுறைகளைப் பேணாது வியாபாரத்தில் ஈடுபட்ட வவுனியா நகரில் கண்டி வீதியில் உள்ள மதுபானசாலை, பூவரசன்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலை, ஓமந்தையில் உள்ள மதுபானசாலை, மரக்காரம்பளையில் உள்ள மதுபானசாலை என்பன 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.