தேர்வு தோல்வி பயம், மதிப்பெண் குறைவு மற்றும் இதர காரணங்களுக்காக தற்கொலை செய்யும் எண்ணத்தை மாணவ சமுதாயம் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தோல்விகளை வெற்றிப்படிக்கட்டுகளாக்கி முன்னேறிச்சென்று வாழ்வில் சாதனை படைத்தவர்கள் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள். படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காத மேதைகள் பலரின் வரலாறுகளையும் நாம் படித்து இருக்கிறோம். ஆனால் பலர் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை, தங்களது கனவு நனவாகவில்லை என்று மனதளவில் துவண்டு தன்னம்பிக்கை இழந்து தற்கொலைக்கு ஆளாகும் தற்போதைய சூழல் அனைத்து தரப்பு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
உயிரைவிட தேர்வு பெரிதல்ல…
குறிப்பாக நீட் தேர்வை சொல்லலாம். மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை, நீட் தேர்வில் தோல்வி பயம் என்றெல்லாம் உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவச் செல்வங்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவம் மட்டுமே படிப்பு அல்ல. அதையும் தாண்டி எத்தனையோ துறைகள் உள்ளன. ஒன்றில் வாய்ப்பு இல்லை என்றால் மற்றொன்றில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அது. எத்தனையோ நிறுவனங்களில், துறைகளில் தாங்கள் படித்த படிப்புக்கு தொடர்பில்லாத வேலையில் கால் பதித்து சாதித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தற்கொலை முடிவுக்கு வருவதென்பது மிகுந்த வருத்தத்துக்குரியது.
தேர்வு தோல்வி பயம், மதிப்பெண் குறைவு மற்றும் இதர காரணங்களுக்காக தற்கொலை செய்யும் எண்ணத்தை மாணவ சமுதாயம் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். உயிரைவிட தேர்வு பெரிதல்ல என்பதே அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
மன அழுத்தம்
தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்றும், அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் எனவும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி மனநலப்பிரிவு துறைத்தலைவர் பேராசிரியை டாக்டர் ஏ.நிரஞ்சனா தேவி வழங்கும் அறிவுரைகள் வருமாறு:-
இன்றைய காலக்கட்டத்தில் நாம் அடிக்கடி அறியும் செய்தி, ‘தேர்வு பயத்தினால் தற்கொலை முயற்சி அல்லது தேர்வு தோல்வியால் தற்கொலை முயற்சி‘ என்பதே. தற்போது பரவலாக பேசப்படும் வார்த்தை மனஅழுத்தம். நம் மனிதகுலம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்வேறு இன்னல்களை சந்தித்தே வாழ்க்கை பாதையை கடந்து வந்திருக்கிறோம். இயற்கையாகவே நம்மிடம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்நோக்கும் திறன் இருக்கிறது. எனினும் ஏன் இப்படி நடக்கிறது? என்பதே பெரிய கேள்வியாக எழுகிறது.
மருத்துவ கனவை திணிக்கும் பெற்றோர்
நம் மாணவர்களின் கல்வி பெரும்பான்மையான நேரத்தில் பெற்றோர்களின் விருப்பப்படியே முடிவு செய்யப்படுகிறது. குழந்தைகளின் கல்வி பற்றிய முடிவும், பெற்றோரின் முடிவும் வேறுபடுகிறது. பெற்றோர்களின் மருத்துவ படிப்பு கனவு குழந்தைகளின் மீது திணிக்கப்படுகிறது. இதனால், மாணவ-மாணவிகள் தம் விருப்பத்தில் இருந்து பெற்றோரின் விருப்ப பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். மன அழுத்தத்திற்கான முதல் விதை அப்போதுதான் விதைக்கப்படுகிறது.
வெற்றிக்கான முயற்சி என்பது உறுதியான பாதை. அந்த பாதையில் மாணவர்கள் தங்கள் அறிவாற்றல், திறன் ஆகியவற்றை ஒருமுகப்படுத்தி தம் இலக்கை நோக்கி முயற்சி பயணத்தில் செல்ல வேண்டும். ஆனால், நாம் நமது எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவது இல்லை என்பதை உணர வேண்டும். தோல்வியும் நம் பாதையில் ஒரு அங்கமாக அவ்வப்போது வரலாம். ஆனால், நாம் உணரவேண்டியது என்னவென்றால், தோல்வி என்பது நம் மீதான முழு மதிப்பீடு அல்ல. அது அப்போதைய அளவீடு மட்டுமே என்பதை உணர வேண்டும்.
தோல்வியே வெற்றிக்கான பாதை
நம் முயற்சிகளில் எந்த இடத்தில் தவறினோம், எதை சரி செய்ய வேண்டும். எப்படி திருத்தினால் அதில் வெற்றி கொள்ளலாம் என்பதே நமக்கான பாடம் என புரிதல் வேண்டும். “ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்“ என்பதில் உள்ள அழகே, வெற்றி,தோல்வியை சரிசமமாய் எடுத்து கொள்ளுதல் ஆகும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டும், அதை வெற்றிக்கான பாதையாக மாற்றுவதே வீரனுக்கு அழகு. மாணவ- மாணவிகளுக்கு தளராத தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.
இவற்றையெல்லாம் மீறியும் சில மாணவர்களுக்கு தேர்வு முடிவு பற்றிய எதிர்மறை சிந்தனைகள் தோன்றும். தோல்வி பற்றிய பயத்தினால், நம் பெற்றோர் நம்மை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சிந்திக்க ஆரம்பித்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் மனதுவிட்டு பேச வேண்டும். வெற்றி, தோல்வியை புரியவைக்க வேண்டும். தனிமையில் விடக்கூடாது. இதில் சில, வெற்றி, தோல்வியை தாங்கும் சக்தி ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது என்பதை பெற்றோரும் கண்டிப்பாக உணருதல் அவசியம்.
அறிகுறிகள்
தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை முதலில் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, மாணவர்கள் தங்களது இயல்பான நிலையில் இருந்து வேறுபடுவர். பிறருடன் பேசாமலிருப்பது, சரிவர உணவருந்தாதது, தூக்கமின்மை, தோல்வி பற்றியே புலம்பிக்கொண்டு இருத்தல். காரணமில்லாத அழுகை, உடல் தொந்தரவுகள் உள்ளிட்ட அறிகுறிகள் அம்மாணவர்களின் மன அழுத்தத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டும் அடையாளங்கள்.
இம்மாதிரியான சமயங்களில் பெற்றோர், மிகவும் கவனமுடன் இருந்து அவர்கள் நலனில் அக்கறையுடன் முழுமையான கண்காணிப்பில் வைத்திருத்தல் அவசியம். அவர்களுடன் அன்பாய்…ஆதரவாய் பேசுவது மிக்க மனபலத்தை கொடுக்கும். தேவைப்படும் சூழ்நிலைகளில் மனநல மருத்துவரின் ஆலோசனை பெறலாம். சிகிச்சை தேவைப்பட்டால் அதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல் அவசியம் ஆகும்.
மனநல ஆலோசனை திட்டம்
இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரின் சீரிய முயற்சியால் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் மனதளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“மனதும், உடலும் ஆரோக்கியமாக இருத்தலே உண்மையான ஆரோக்கியம்“ என உலக சுகாதார அமைப்பு ஆரோக்கியத்தை முறைப்படுத்தி இருக்கிறது. எனவே, தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல!. வாழ்க்கை என்பது அனுபவங்களின் கல்விக்கூடம். அதில் கற்றுக்கொள்ளும் நல்ல பாடங்களின் மூலம் தோல்விகளை வெற்றியாக்கும் முயற்சியில் வீறுநடைபோடுவோம்.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை பெற செல்போன் எண்கள் அறிமுகம்
‘நீட்‘ தேர்வு பயத்தில் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்கும் வகையில் மாவட்டந்தோறும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று, மாவட்டந்தோறும் உள்ள ஆலோசனை மையங்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது. ஆலோசனை வழங்க தமிழகத்தில் 333 மனநல நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் மனநல ஆலோசனை பெற 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அழைக்கலாம். மேலும் மாநில மனநல நிறுவன மையத்தை 91541 54092, 044-26425585, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மையத்தை 75501 00373, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மையத்தை 95227 55978, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மையத்தை 80721 68415 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர மாவட்டந்தோறும் மனநல ஆலோசனை மைய செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-