மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி சார்ந்த, கல்வி சாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு பயண ஏற்பாடுகளை வழங்க (25,000 பேருக்கு) UBER, யுனெஸ்கோ மற்றும் கல்வியமைச்சு ஆகியன கைகோர்த்துள்ளன. இந்த சவாரிகள் கொவிட் தொடர்பற்ற மருத்துவ சேவைகளைப் பெறும் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம்.
UBER இந்த சவாரிகளை ஒரு தனித்துவமான மற்றும் எளிதில் பயன்படுத்தக் கூடிய சலுகைக் குறியீட்டின் மூலம் முன்னெடுத்து வழங்குகிறது. ஒவ்வொரு நபரும் இரு முறை தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்காக தடுப்பூசி ஏற்றும் மையங்களுக்குச் சென்று வருவதற்கு நான்கு இலவச சவாரிகளைப் பெற்றுக் கொள்ள இத்திட்டம் உதவுகிறது. ஒவ்வொரு சவாரியின் போதும் பயன்படுத்தக் கூடிய அதிகபட்ச சலுகை பெறுமானம் ரூபா 300 ஆகும். இந்த சலுகை 2021 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.
தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளும் ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் மாணவர்களின் நலனுக்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை விரைவாக மீண்டும் திறப்பதற்கு இத்திட்டம் உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கல்விக்கான உரிமை மீது யுனெஸ்கோவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய, இலங்கை, இந்தியா, பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான யுனெஸ்கோ பிரதிநிதியான எரிக் ஃபால்ட் , “தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு பாதுகாப்பாகச் சென்று வருவதில் காணப்படும் முட்டுக்கட்டைகளை அகற்றும் ஒரு உலகளாவிய முயற்சிக்கு பங்களிப்பதற்காக UBER உடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது மிகவும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முயற்சி என்பதுடன், தொற்றுநோயின் தற்போதைய அலையிலிருந்து நாடு மீண்டு வருகின்ற நிலையில், ஆசிரியர்கள் மற்றும் கல்வி கட்டமைப்பில் உள்ள ஏனையவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்யும். இது ‘வகுப்பறை நேரடி கற்றல் நடவடிக்கைகளுக்கு’ திரும்புவதற்காக பாடசாலைகளை மீண்டும் திறப்பதை துரிதப்படுத்தும் என்று நம்புகிறோம். மேலும் ஆசிரியர்கள், அவர்களைச் சார்ந்துள்ள சமூகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்கும்” என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டாண்மை குறித்து, UBER தெற்காசியாவின் தலைமை அதிகாரியான பிரப்ஜீத் சிங் கருத்து வெளியிடுகையில், “யுனெஸ்கோவுடனான எமது உலகளாவிய கூட்டாண்மையை இலங்கைக்கும் விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது கல்வித் துறையில் ஆசிரியர்கள் மற்றும் ஏனையோருக்கு தடுப்பூசி நிலையங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை வசதிகளுக்கு பயணிப்பதற்கு உதவும் என்பதுடன், பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்குச் சென்று தமது கல்விச் செயற்பாடுகளைத் தொடர உதவும். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பிரயாண வசதி ஒரு தடை இல்லை என்பதை உறுதி செய்வதில் UBER தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. இத்திட்டத்தின்படிஇலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளது” என்று குறிப்பிட்டார்.