நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் 200 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான கலந்துரையாடல்கள் மாகாண ஆளுநர்கள் தலைமையில் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.
இதுதொடர்பாக வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் கூறுகையில், கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் உள்ளன. அனைத்து வலயங்களில் இருக்கும் பாடசாலைகளை ஒரே தினத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கின்றோம்.
அத்துடன் மாகாணத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் ஆசிரியர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போக்குவரத்து அமைச்சருடன் பேசி அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையின் கீழ் தமது பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
மேலும் ஆசிரியர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகளுக்கு பயிற்சியளிக்க மாகாண சபையின் நிதியில் சுகாதாரத் திட்டங்களை முன்னெடுக்க உத்தரவிட்டிருக்கின்றேன். மேலும், ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களைப் பெற்று ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன். அனைத்து ஒழுங்குகளும் முடிவடைந்த பின்னர் பாடசாலைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை தென் மாகாணத்தில் இருக்கும் 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு தென்மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்திருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் தென் மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைவாக 514 பாடசாலைகள் இருக்கின்றன. அந்த பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த பிரதேச வலயக்கல்வி காரியாலங்களுக்கு அறிவிப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் அந்த பிரதேசங்களில் இருக்கும் பாடசாலைகள் பிரதேச சபைகளின் ஒத்துழைப்புடன் தொற்று நீக்கம் செய்யப்பட்டு துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் 200மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாகாண ஆளுநர்கள் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.