இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இரகசியமான முறையில் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டமை பாரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் (Vinthan Kanakaradnam) தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமிழர் தாயகத்தில் உள்ள தீவகத்தில் சீனாவின் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இவ்வாறு பாகிஸ்தான் தூதுவர் இரகசியமான நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவிற்கு அருகில் உள்ள குறித்த தீவுப் பகுதியில் எதிரி நாடுகள் நுழைவது தமிழர்களுக்கு மட்டுமின்றி பாரத தேசத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர் தேசங்களில் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் தெரிவித்ததாகவும் விந்தன் கனகரட்ணம் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர் தேசங்களில் இயங்கக்கூடிய அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. கறுப்பு பட்டியலில் சேர்த்து இருக்கின்றது.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அந்த அமைப்புக்களை கடந்த காலங்களில் பயங்கரவாதத்துக்கு துணை போகின்ற அமைப்புகளாக முத்திரை குத்தி இலங்கை அரசாங்கம் தடை செய்தனர். அனால் தற்போது குறித்த அமைப்புக்களோடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த செய்தி நகைப்புக்கிடமாக எண்ணத் தோன்றுகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அந்த அமைப்புகளை தடைப்பட்டியலில் இருந்து இலங்கை அரசாங்கம் நீக்க வேண்டும். மேலும் அரசாங்கத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ஊதுகுழலாக இணைந்து செயற்படுகின்ற அமைப்புகளோடு அரசாங்கம் பேசுவார்களாக இருந்தால் அதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இதேவேளை இலங்கையில் ஒரு பேச்சு வெளிநாடுகளிலே இன்னொரு பேச்சு. இப்படியாக இரட்டைவேடம் போடுகின்ற இந்த அரசியலை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் இதன்போது தெரிவித்துள்ளார்.