யாழ்.சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் நேற்று இரவு (05) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சாவகச்சேரியைச் சேர்ந்த 64 வயதுடைய நடராசா பொன்னுச்சாமி என்பவரே மரணமடைந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மிதிவண்டியில் யாழ்.சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முதியவரை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியோரத்தில் தரித்திருந்த வாகனத்தை கடந்து செல்ல முற்பட்டபோதே முதியவர் மீது எதிரே வந்த வாகனம் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.