ஆன்லைன் வர்த்தகத்தில் ஒவ்வொரு விழாக்காலத்திலும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்படும். பிரபல நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு இந்த தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சயில் பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சில சிரமங்கள் இருந்தாலும் இந்த முறையை சரியாக கையாள்வதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும். அதற்கான வழிகள் இங்கே..
கடன் அட்டையை பயன்படுத்துதல்
தற்போது வங்கிகள் வாடிக்கையாளரை கவர்வதற்காக கடன் அட்டையை வழங்கி வருகின்றன. இதன் மூலம் மாதந்தோறும் 100 முதல் 500 ரூபாய் வரை சேமிக்க முடியும். பண்டிகை காலங்களில் வங்கிகள் கடன் அட்டைகள் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு சலுகைகள் அறிவிக்கும். இதை பயன்படுத்தி மளிகைப்பொருட்கள் வாங்கும் போது 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.
கடன் அட்டையை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தும் போது குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். செலவு செய்யும் தொகைக்கு வங்கிகள் வட்டி விகிதம் நிர்ணயித்தாலும் கடன் அட்டை மூலம் சேமிக்கும் பணத்தில் அதை திருப்பிச்செலுத்தலாம்.
இது தவிர பெட்ரோலுக்கான கடன் அட்டையும் உள்ளது. இதை உபயோகப்படுத்தும் போது கேஷ்பேக் சலுகைகளை பெற முடியும்.
கூப்பன்களை பயன்படுத்துதல்
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை பலரும் விரும்புகின்றனர். இதில் வாடிக்கையாளரை கவர்வதற்கு தள்ளுபடி கூப்பன்கள் அறிவிக்கப்படும். பிராண்டுகளின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடன் அட்டைக்கு வங்கிகள் சார்பிலும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படும். இவற்றை பயன்படுத்துவதால் 30 சதவீதம் வரை எளிதாக பணத்தை சேமிக்கலாம். மேலும் தரமான பொருட்களை குறைந்த விலையில் பெற முடியும்.
விற்பனையின் முதல் நாளே பயன்படுத்துதல்
ஆன்லைன் வர்த்தகத்தில் ஒவ்வொரு விழாக்காலத்திலும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்படும். பிரபல நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு இந்த தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். இந்த விற்பனையின் முதல் நாளில் பல்வேறு விதமான சலுகைகள் இருப்பதால் அன்றைய தினத்தை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் லாபத்தை அடையலாம்.
விலையை ஆய்வு செய்தல்
ஆன்லைனின் பொருட்கள் வாங்குவது என முடிவு செய்த பின்பு முதலில் குறிப்பிட்ட 3 மாதங்களில் அந்த பொருளின் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களை நன்றாக ஆய்வு செய்ய வேண்டும். விலை சற்று குறைவாக இருக்கும் போது அந்த பொருளை வாங்குவது நல்லது.
புள்ளிகளை பயன்படுத்துதல்
வங்கிகள் தாம் வழங்கும் கடன் அட்டையை பயன்படுத்தும் போது வாடிக்கையாளரை கவுரவிக்கும் வகையில் சில புள்ளிகள் வழங்குகின்றன. இவற்றை குறிப்பிட்ட இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சேமிக்கலாம்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.
மின் கட்டணம் முதல் எந்த வித கட்டணமாக இருந்தாலும் இப்போது ஆன்லைனில் செலுத்தலாம். இதற்காக பல இணையதளங்கள் உள்ளன. அவற்றை பயன்படுததும் போது வாடிக்கையாளர் 5 முதல் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.