நோர்வே நாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான 4 லட்சத்து 85 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் அவரது தனிப்பட்ட உடமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிலாபம் வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று வென்னப்புவை – வைக்காலை பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோர்வே ட்ரிம்சோ பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான வேலாயுதம் நகுலேந்திரன் என்பவரின் பணமும், உடமைகளுமே கொள்ளையிடப்பட்டுள்ளன.
இது குறித்து அவர் வென்னப்புவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னை அழைத்துச் சென்ற பேருந்தில் வைக்கப்பட்டிருந்த தனது பயணப் பொதியில் இருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணம் மற்றும் உடமைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் ,வென்னப்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.