இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் இலங்கை மத்திய வங்கி 11 ஆயிரத்து 58 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) பதவியேற்ற நாள் முதல் இதுவரை 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக இலங்கையின் மத்திய மற்றும் தென் மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் (Rajith Keerthi Tennakoon)தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கை மத்திய வங்கி, ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 805 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது.
அரசின், நிதிசெயற்பாடுகள் தொடர்பில் அல்லது பணம் அச்சிடுதல் தொடர்பில் பொருளாதார நிபுணர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அல்லது எதிர்கட்சியினரின் கவனம் இதுவரை திரும்பவில்லை என்று ரஜித் கீர்த்தி தென்னகோன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அநாவசிய செலவுகள் அதிகரித்துள்ளன. மறுபுறம் நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன. வகைதொகையின்றி பணம் அச்சிடப்படுகின்றது.
விவசாய உற்பத்திகள் இன்மை, போதியளவு உரமின்மையால் பட்டினி நிலைமை உருவாகின்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி செல்கின்றது என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கும் ரஜித் கீர்த்தி தென்னகோன், எல்லா நகரங்களிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்களின் படி இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணை முறியல்களின் முகப்பு பெறுமதி 2020 ஜனவரி முதலாம் திகதி 74074 பில்லியன்களாகும். அது நேற்று 1,442.79 பில்லியன்களாக உயர்ந்துள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் இதுவரை இலங்கை மத்திய வங்கி 1368.05 பில்லியன்களை அச்சிட்டுள்ளது. இந்த செயற்பாடுகளால் இலங்கையின் பொருளாதாரம் நூலறுந்த பட்டம் போல ஆகியிருக்கிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.