கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பல பிரதான பகுதிகளில் எரிபொருள் விலை உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எட்மண்டன் பகுதியில் புதன்கிழமை சில எரிபொருள் நிலையங்களில் லிற்றருக்கு 141.9 என விற்பனை செய்யப்பட்டுள்ளது. விண்டர்பர்ன் சாலையில் அமைந்துள்ள காஸ்ட்கோவில் லிற்றருக்கு 119 என விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனால் சாரதிகள் பலர் அப்பகுதியில் வரிசைகட்டி காத்திருந்து எரிபொருள் நிரப்பிச் சென்றுள்ளனர். சமீப நாட்களாக எரிபொருள் விலை உச்சத்தை தொடுகிறது என தெரிவித்துள்ள ஒருவர், நம்மால் என்ன செய்ய முடியும்? மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாணத்தை பொறுத்தமட்டில் எரிபொருள் உற்பத்தியில் முன்வரிசையில் இருந்தும் நாம் மிகப்பெரிய விலையை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார் பெண்மணி ஒருவர்.
ஆல்பர்ட்டாவில் குடியிருப்பதால் எரிபொருளுக்கு குறைவான கட்டணம் செலுத்தி, அதன் பலனை அனுபவிக்கலாம் என்று எண்ணியது வீண் என விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் இன்னொருவர்.
இதனிடையே, கடந்த திங்கட்கிழமையில் இருந்தே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 71ல் இருந்து 79 டொலர் என அதிகரித்துள்ளது. இதுவும் எரிபொருள் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ள பெட்ரோல் ஆய்வாளர் ஒருவர்,
கனடா டொலரின் மதிப்பில் எந்த மாறுதலும் ஏற்படாதது இன்னொரு காரணம் என்றார். மேலும், பொதுவாக கடந்த காலங்களில் எண்ணெய் விலையில் கணிசமாக 10 முதல் 15 சதவிகிதம் அதிகரித்திருப்பதைக் கண்டோம், அதோடு தொடர்புடைய அமெரிக்க டொலருக்கு எதிராக கனேடிய டொலரின் மதிப்பும் அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டாவை விட கல்கரியில் எரிபொருள் விலை உச்சத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. புதன்கிழமை பகல் கல்கரியில் லிற்றருக்கு 143 என விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களில் சரிவடையும் என்றே நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.