கனடாவில் தமது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களை சமூக ஊடகத்தினூடே பதிவு செய்து வந்த கான்கார்டியா பேராசிரியர் மரணமடைந்துள்ளார்.
குறித்த தகவலை கான்கார்டியா பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்துள்ளது. 43 வயதான நதியா சவுத்ரி என்பவரே கருப்பை புற்றுநோய் காரணமாக, நோய் உறுதி செய்யப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் மரணமடைந்தவர்.
பாகிஸ்தானில் பிறந்து தமது 17ம் வயதில் அமெரிக்காவில் கல்விக்காக சென்ற சவுத்ரி, அதன் பின்னர் கடந்த பல ஆண்டுகளாக கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
ஒரே ஒரு மகன் மற்றும் கணவருடன் வாழ்ந்து வந்த நதியா சவுத்ரியின் மறைவு உலக மக்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், குடும்பத்தில் ஒருவரது மறைவாகவும் கருத வைத்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் இரங்கல் செய்திகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர். கருப்பை புற்றுநோய் தமது உயிரை எடுக்கும் என முடிவு செய்த பின்னர், சமூக ஊடகங்களில் தமது வாழ்க்கையின் கடைசி நாட்களை அவர் பகிர்ந்து வந்துள்ளார்.
இதனால் சமூக ஊடகங்களில் அவரது கருத்துகளை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 143,000 என அதிகரித்தது. இதுவரை தாம் அனுபவித்த வாழ்க்கையை, மருத்துவமனை அனுபவங்களை, மறக்க முடியாத நினைவுகளை, தமது 6 வயது மகன் குறித்தும் அவர் நாளும் பதிவு செய்து வந்துள்ளார்.
கடைசியாக செப்டம்பர் 13ம் திகதி தமது சமூக ஊடக உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே, சிறுபான்மையினர் மற்றும் வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட நரம்பியல் அறிவியலில் மாணவர்களை ஆதரிப்பதற்காக தமது பெயரில் உதவித்தொகை வழங்கும் முயற்சிகு 500,000 டொலர் தொகைக்கு மேல் பேராசிரியர் சவுத்ரி திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.