அண்மைக்காலமாக வெள்ளவத்தையில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிசார் எச்சரித்துள்ளனர்.
வெள்ளவத்தையில் மக்கள் அதிகமுள்ள தொடர்மாடி வீடுகள் ஒவ்வொன்றுக்கும் செல்லும் பொலிசார், இது தொடர்பான தகவல்களை வழங்கி வருகின்றனர்.
வெள்ளவத்தையின் சில தொடர்மாடிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் இரவு நேரத்தில் திருடர்களின் கைவரிசை அதிகரித்திருப்பதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இரவு நேரத்தில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டி வைத்து விட்டு உறங்குமாறும், சந்தேகத்துக்கிடமான எவரேனும் நடமாடினால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தருமாறும் மக்கள் கேட்கப்பட்டுள்ளனர். இதற்கென பொலிசார் தங்களது விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டை மக்களுக்கு வழங்கியுள்ளனர்.
மக்கள் அழைப்பை ஏற்படுத்தினால் தாங்கள் உடனடியாக ஸ்தலத்துக்கு வரத் தயாராக இருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.
தொடர்மாடியில் குடியிருப்போர் தங்களது அயல்வீட்டாரின் பாதுகாப்பு குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். யாராவது நடமாடினால் அனைத்து வீட்டாருக்கும் தகவல் கொடுத்து எச்சரிக்கையை ஏற்படுத்தி விடுவதன் மூலம் திருடர்களின் திட்டத்தை முறியடிக்க முடியும்.
திருடர்கள் ‘எஸ் லோன்’ குழாய் வழியாக மேலே ஏறி குளியலறை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பணம், நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.